7. மனோபாவம்
சரியாக வார்க்கப்படுகிறதா?
அன்று
10ம் வகுப்பு விடைத்தாள்களை மதிப்பீடு செய்துகொண்டிருந்தேன். வகுப்பிற்குள் நடக்கும்
தேர்வுதானே என்கிற பிள்ளைகளின் மனநிலை நன்றாகவே தெரிந்தது. ‘தேர்வுக்குப் பயன்படுத்திய
விடைத்தாள்கள் நன்றாக இல்லை, சிலர் நோட்டுப் புத்தகத்திலிருந்து தாளைக் கிழித்து எழுதியிருந்தனர்.
சொற்றொடர் முழுமையாகாத விடைகள், அளித்தல் (presentation) முறையும் கவலை உண்டாக்கியது.
மனதிற்கு
திருப்தி இல்லை. ஒரே ஆதங்கமாக வந்தது. விடைகளை சரியாக எழுதவில்லை என்பது ஒரு குறையாகவே
தெரியவில்லை, ஆனால் தேர்வில் குழந்தைகளின் பங்களிப்பு என்பது அவர்களின் மனோபவத்தைக்
காண்பிப்பதாக இருந்தது. அதுதான் எனக்கு பெரிதும் சோர்வை அளித்தது. வகுப்புத் தேர்வு
என்றாலும் அதனை முறையாக எதிர்கொள்வதும் பங்கேற்பதும் அவர்களின் கடமை அல்லவா? வெறுமனே
பிள்ளைகளை, நாளைய தேசத்தின் எதிர்காலம் அது இது என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம்,
ஆனால் அவர்கள் அதற்கேற்றத் தலைமைப்பண்பு, வழிகாட்டும் நெறி, இத்தனைப் பெரிய தேசத்தை
அவர்களிடம் ஒப்படைப்பதற்கான சமூகப் பொறுப்புகளுடன்தான் உருவாகிக் கொண்டிருக்கிறார்களா
என்பது நெருங்கிப் பார்த்தால் கவலை வரத்தான் செய்கிறது.
பொதுவாகவே குழந்தைகள் “நல்லாப் படிக்கனும், பெரிய
ஆளா ஆவனும், லைஃப் ல செட்டில் ஆகனும்” என்பதை மட்டுமே கேட்டு வளர்கிறார்கள். மாறாக
பின்னாளில், சமூகத்தில் தனக்கான பங்களிப்பு என்னவாக இருக்கவேண்டும்? என்பதற்கான பரந்தப்
பார்வைதான் ‘நாம் இன்னும் எவ்வளவு பயணிக்கவேண்டும்’ என்கிறத் தொலைவை அவர்களுக்கு உள்ளபடியே
காண்பிக்கும் என்றுத் தோன்றுகிறது. தவிர தன்னை மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமானது
என்கிற குறுகிய எல்லை அவர்களுக்குத் தீர்மானிக்கப்படும்போது அவர்கள் விரைவிலேயே அந்த
எல்லைகளைக் கடந்துவிட்டதாக அல்லது இது போதும் என்பதாக முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
அந்த நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகளின் மனோபாவமாக மாற ஆரம்பிக்கிறது. இதற்கெல்லாம்
அடிப்படைக் காரணங்கள் என்னவாக இருக்க முடியும் என்று பார்ப்போம்.
சமீபமாக
பல்வேறுத் தளத்திலிருந்தும் கல்விமுறை குறித்தும், தேர்வு முறைகள் குறித்தும் முன்வைக்கப்
படும் எதிமறைக் கருத்துக்கள், வேறு யாரையும் விட பிள்ளைகளை வேகமாகவும் ஆழமாகவும் சென்றடைகின்றன.
அடிப்படை மாற்றங்களுக்கு வித்திடாத இம்மாதிரியான கருத்துக்கள் சம்மந்தப்பட்டவரின் ஒளி
வட்டங்களுக்கானது மட்டுமாகவே இருக்கமுடியும். அது ஒரு புறம் என்றால், இம்மாதிரியான
எதிர்மறைக் கருத்துக்கள் பெரும்பாலான பதின்ம வயதுக் குழந்தைகளை நடைமுறை வாழ்வில் ஒருவித
மெத்தன மன நிலைக்குக் கொண்டுவந்துவிடுகிறது என்கிற விபரீதம் ஏன் யாருக்கும் புரிபடவில்லை
என்பது வியப்பாக இருக்கிறது. ஏற்கனவே சூழ்ந்திருக்கும் பருவம் சார்ந்த இயற்கையான மனச்சிக்கல்களுக்கு,
இப்படியான கல்வி மற்றும் தேர்வு குறித்த எதிர்மறைக் கருத்துக்கள் சௌகரியமான போக்கு
என்றாகிவிடுகிறது.
ஆனால்
நடைமுறையில் காட்சி வேறாக இருக்கிறது. ‘ஒரு பிள்ளை, உளவியல் தெரிந்தவன், அன்பு, கருணை,
ஒழுக்கம், சகிப்புத்தன்மை, சேவை மனம் நிறைந்தவன் கட் ஆஃப் இல்லையென்றாலும் மேல்நிலைத்
தேறிவிட்டான், மருத்துவம் படிப்பது கனவு என்கிறத் தகுதிகளோடு அவன் மருத்துவக் கலூரிகளில்
சேர்ந்துவிட முடிவதற்கில்லை. அதுபோலவே பொறியியலுக்கான அடிப்படைத் தகுதிகளை மட்டுமே
வைத்து பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துவிடுவதும் சாத்தியமில்லை. என்றால் இப்படியான
பிரச்சாரங்கள் எளிய மாணவச் சமூகத்தை ஆசுவாசப்படுத்துவதற்குப் பதில் அசட்டையாக்கிவிடுகின்றன
என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
கற்பித்தல்
முறைகளில், பிள்ளைகள் பாடங்களை அனுகச்செய்யும் முறைகளில், தேர்வு முறைகளில் அவற்றின்
முடிவுகளை எதிர்கொள்ளும் மன நிலைகளில் என இவற்றில் மாற்றம் உண்டாக்கும் புதியக் கல்வியல்
தரவுகளே இப்போதையத் தேவை. அவற்றை எதிர்ப்பதான கருத்துக்கள் இல்லை.
தவிர,
பிள்ளைகளுக்கு இலக்குகளைப்பற்றியும் அவற்றை அடைவதற்கு, போட்டி மன நிலையும், கடும் பயிற்சியும்,
விடா முயற்சியுமே அடிப்படை என்பதைப் புரிந்துகொள்வதில் பிள்ளைகளுக்கு எந்தவிதமானத்
தடைகளும் இருக்கக்கூடாது. மாணவர்கள் தேர்வுகளை நேசிக்க வேண்டும், அது அவர்களின் எளிய
மற்றும் அவசியமானக் கடமை. மேலும் அது அவர்களுக்கான அடைதல் சோதனை.
இங்கே
ஒரு விஷயத்தை பேசுவது சரியாக இருக்கும்., சமீபமாக பொறியியல் கல்லுரிகளில் மாணவர்ச்
சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டுக்கு குறைந்து வருவதையும், பல கல்லூரிகள் மூடப்படுவதாகவும்
செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அந்தச் செய்தி, பொறியியல் படிப்பதில் மாணவர்களுக்கு
விருப்பம் குறைந்துவிட்டதெனவும், வேலை வாய்ப்பின்மை போன்றவைதான் இதற்குக் காரணம் என்பதாகவும்
மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் நாம் இதனை இன்னொரு கோணத்தில் யோசித்துப் பார்த்தால்
நிலைமை பெரும் கவலைக்குறியதாக இருப்பதைப் புரியலாம்.
எல்லோருமே
மாற்றுத் துறைகளை தேர்ந்துவிடுவதில்லை எனில், முதல் மூன்று நாட்களில் வைக்கப்படும்
கட் ஆஃப் மதிப்பெண்களில் மாணவர்கள் சேர்க்கை குறைவு என்பது அந்தத் தரத்திற்கு பிள்ளைகள்
இல்லை என்பதையும் மறைமுகமாகச் சொல்லிவிடுகிறது என்பதுதானே உண்மை., இரண்டாம் கட்டம்
முடிந்து, மூன்று, நான்கு, ஐந்தாம் கட்டக் கலந்தாய்வு வரையிலும் மாணவர்கள் சேர்க்கை
முழுமையாக நடைபெறவில்லை என்றால் அந்தத் தரத்திற்கும் பிள்ளைகள் இல்லை என்பதும்தானே
உண்மை. எத்தனை விபரீதம் இது? இன்றிலிருந்து குறைந்தபட்சம் இன்னும் 20 - 25 ஆண்டுகளில்
இதற்கான விளைவுகளை தேசம் எதிர்கொள்ளவிருக்கிறது. அந்தந்தப் பொறியியல் துறைகளில் உற்பத்தி,
சேவைகள் நலிந்து மொத்த உள்நாட்டு உற்பத்திக் குறைந்து… உலகின் இரண்டாவது பெரிய மக்கள்
தொகைக் கொண்ட தேசத்தின் மனித வளம் பாழாகிக்கொண்டிருக்கிறது.
குழந்தைகளின்
இந்த அடைதலைத் தடுத்துவிட்டது எது? அசட்டை, மெத்தனம், பொறுப்பின்மைகள்தானே? ஆனால் இதற்கெல்லாம்
அவர்கள் காரணமல்ல என்பது பரிதாபமான உண்மை. இதுவெல்லாம் சிறுவயதில் உண்டாக்கப்பட்ட தன்னல
எண்ணங்கள், கல்வியல் குறித்து நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தப்பட்ட எதிர்மறை எண்ணங்களின்
நீட்சி என்றால் அது மிகையல்ல.
அன்று
விடைத்தாள்களைத் திருத்தும்போது நான் எதிர்கொண்டதும் பிள்ளைகளிடம் அப்படி உருவாகியிருந்த
அசட்டை மனங்களைத்தான். தேர்வில் விடைகளைக் கூட பரவாயில்லை என்று எடுத்துக்கொண்டாலும்,
அளித்தல் முறை முழுமையாகவே இல்லை. ‘மார்ஜின் முறையாக இல்லாமல், எழுத்துக்கள் ஒழுங்கில்லாமல்,
விடைத்தாள் விவரங்கள் சரியாகப் பூர்த்தி செய்யாமல் என்பதோடு 50 மதிப்பென்களுக்கும்
முழுமையாக முயற்சிக்காமல் 10-15 மதிப்பெண்களுக்கு மட்டுமே விடை எழுதியிருக்கிறார்கள்’
என ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் அயற்சியாக இருந்தது.
இந்த நிலையை,
மதிப்பெண்தான் தேர்வா, அதை எழுதினால்தான் மாணவனா என்கிற போக்கில் விவாதித்து முடித்துக்கொள்ள
முடியாது. அப்படியென்றால் ஆம் தேர்வுகள் முக்கியம்தான், அதை எழுதினால்தான் மாணவன் என்றுதான்
சொல்லத்தோன்றுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரையிலும் வாழ்வு நெடுக விதவிதமான தேர்வுகளை
மட்டுமே எதிர்கொள்ளவேண்டியதாய் இருக்கக்கூடிய வாழ்க்கை முறையில், பள்ளித் தேர்வுகள்
ஒரு பெரிய வெற்றியை நோக்கிய பயணத்தின் சின்னச் சின்ன அடைதல்களாக, நம்பிக்கையூட்டுவனவாக
இருக்கின்றன. தவிர ஒரு பிள்ளைக்கு அதைவிட வேறென்னக்
கடமை இருந்துவிடமுடியும்.
தேர்வைச்
சுற்றி நிகழ்கிற ‘தேர்ச்சி இல்லையென்றால் அவ்வளவுதான், வாழ்வே முடிந்துவிட்டது, நீ
வேஸ்ட்’ என்பது போன்ற அபத்தங்களை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், அவைகள் ஒழிக்கப்படவேண்டியதும்
கூட. ஆனால் தேர்வு என்பது ஒரு மாணவனுக்கு பீடு நடைப் போட்டு தன்னை மெய்பிக்கக் கூடிய
களம். அதனினும், இந்தப் போட்டியில் மட்டும்தான் லட்சம் பேர் என்றாலும் முதலிடமோ அல்லது
அடுத்தடுத்த இடங்களோ எல்லோருக்கும் பொதுவாக இருக்கும். குழந்தைகளை இறங்கி விளையாடச்
செய்யவேண்டும்.
மேலே குழந்தைகள்
தேர்வு எழுதிய முறையைப் பற்றி சொல்லியிருப்பதில் ‘மார்ஜின் போடாதது எல்லாம் ஒரு குற்றமா’
என்று எல்லாம் ஒன்றுமில்லாததுப் போல தோன்றலாம். ஆனால் கவலை உண்டாக்கியது மதிப்பெண்கள்
சார்ந்த அடைதல் மட்டுமே அல்ல, அவர்களின் குணாம்சம் பற்றியது. அவையெல்லாம் பிள்ளைகளின்
அகச் சூழல் அல்லது குணாதிசயங்களின் வெளிப்பாடுகள் என்கிற நோக்கில் பார்த்தால், திடுக்கிடலாய்
இருக்கிறது. பிறகு? மாணவன் என்பது ஒரு சமூகத்தின் வளமல்லவா?
சுமாராக
ஒரு பள்ளியில் 2000 மாணவர்கள் என்று வைத்துக்கொண்டால் இன்றைக்கு பல கிராமங்களின் மக்கள்
தொகை சில நூறுகள்தான் என்கிற நிலையில், அவர்களின் எதிர்கால வாழ்க்கை முறை என்பது ஒரு
சமூக உருவாக்கம் என்று புரியும். என்ன மாதிரியான சமூகம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது
என்பதும் புரியும். ஒரு பள்ளி என்பது சிற்றூர் என்றால், மாநிலங்கள் முழுது இருக்கும்
பள்ளிகள் சேர்ந்ததுதான் வருங்கால தேசம். குழந்தைகளை கொஞ்சம் நெருங்கி அவதானித்தால்
அவர்கள் எத்தகையச் சமூகத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்பதைப் புரியலாம்.
குழந்தைகளுக்குத்
தாம் மாணவர்கள் என்கிற இருத்தலை, அதற்கான கடமைகளை நேசிக்கச் செய்தல் வேண்டும். கடமைகளை
அவர்கள் நேசிக்க ஆரம்பித்துவிட்டால் போதும் அவர்களை பின் தொடர்ந்து மதிப்பீடு செய்தல்
தேவையற்றதாகிவிடும். ஒருவேளை இன்றையச் சமகாலச் சமூகச் சூழல் பொறுப்பற்றது எனில் நேற்றைய
மாணவர்கள் முறையாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை ஏற்றுக்கொள்ளாத்தான்
வேண்டும்.
இனி, எனது
பிள்ளைகள் தேர்வுகளை நல்ல முறையில் எழுதுவார்கள், ஏனெனில் இனி அவர்களுக்குத் தேர்வு
என்பது சுமை அல்ல., கடமை, பொறுப்பு, எதிர்காலத்திற்கான சமூக ஆக்கத்தில் தனது பங்கு
என்ன என்பதற்கான சுய மதிப்பீடு. ஆம் இனி அவர்களுக்குத் தேர்வு என்பது முழு மதிப்பெண்களுக்கானது
அல்ல, முழுமையாகச் செயல்படுவதற்கானது.