அவர்களின் விளைபயிர்களை
அவர்களை
சிதைத்துவிடுகிறோம்
இது சற்றே அதிகம் தான் என்றாலும்
வேறு வழிகளின்றி
இப்படி நேர்த்திவிடுவதாகிறது
நமது கால்களின் கீழே
நமது நிலங்கள்
நமதாகயில்லை
நமதுயிரின் மேலான
அவர்களின் மேலான உதாசீனத்தில்
முகம் சிதைந்து
ஆயுதங்களை இழந்து உலர்ந்த,
அவர்களின் நெடிய வீதியெங்கும்
துண்டங்களாய்
சிதறி மாய்ந்த,
கையறு நிலையில்
நாம் விட்டுத்திரும்புகையில்
அவர்களின் பெருங்குழிகளில்
ஈனக்குரல்களில் கரைந்து போன,
நம்மவர்களுக்காகவும் இது.,
என்பதை
தயக்கமின்றி ஏற்கத்தோன்றுகிறது
( இதைக் கூறுகையில்
எதிரே இருந்தவர்களின் விழிகளும்
நனைந்திருந்ததைக்
காணமுடிந்தது )
..............
வணமொழி
சொல் - 9 , வார்த்தைகள் - 36
என்ற தலைப்பிட்டத் திங்களிதழின்
'யானைக் கூட்டத்தில் புகுந்த தேயிலைத் தோட்டங்கள் '
என்பதான தலையங்கத்தின்
சில பத்திகள்
மேலே நீங்கள் படித்தவை.
-இயற்கைசிவம்
No comments:
Post a Comment