Thursday 16 January 2014

சிருஷ்டிக்கும் அலாதிப் பிரியத்தின் கடவுள்


’கடலில் வசிக்கும் பறவை’ -
சிருஷ்டிக்கும் அலாதிப் பிரியத்தின் கடவுள்
-----------------------------------------------------------

ஒவ்வொரு காலகட்டத்திலும் அக்காலத்திய பதிவுகளோடு எழுதப்படும்போது கவிதை ஒரு வரலாறாகவும் உறைந்துவிடும் சாத்தியங்களோடு திகழும் வல்லமை பெறுகிறது. சங்கம் மரபு புதுக்கவிதை யாவும் அப்படியான அடையாளங்கள் கொண்டிருப்பதை எளிதில் புரியலாம். இங்கே கவிதை வரலாறாக மாற வேண்டியதின் அவசியம் குறித்த தர்க்கத்திற்கு நான் வரவில்லை., தவிர சமகாலத்திய பதிவுகளை புறக்கணிக்கும் கவிதை முகமற்றுப் போகிறது.

என்றாலென்ன நாம்தான் முகமற்றதை நவீனமாக்கிக்கொள்கிறோமே !!!

சிருஷ்டிக்கும் அலாதிப் பிரியத்தின் கடவுள் என்பதையும் தாண்டி கவிஞனை சமகாலத்தின் சாட்சி மனிதனாகவும் கவிதை சில நேரங்களில் வாழ்விக்கிறது. இது நேரும்போது சிருஷ்டிகளும் வாசகனின் லயிப்பில் திளைக்கின்றன. இச்சூழல் மிருதுவானதும் கவிதையை கிணற்றிலிருந்து கவர்ந்து கடலில் விடுவதும் ஆகும்.

நிலாரசிகன் கடவுள் மற்றும் சாட்சியாகவும் இருக்கிறார்.

சமீபத்திய புது எழுத்து வெளியீடாக வந்திருக்கும் நண்பன் நிலாரசிகனின் ’கடலில் வசிக்கும் பறவை’ கவிதைத் தொகுப்பு அழகியல், பதிவுகளியல் ஆகியனவற்றின் கூடாக கட்டப்பட்டிருக்கிறது.

’கடலடியில் ஓர் ஓவியத்தை
கண்டெடுத்தார்கள்
அதிலொரு நதி இருந்தது
அதன் மேலே சில நீர்ப்பறவைகள்
பறந்துக் கொண்டிருந்தன
நதிக்கரையில் துள்ளி விளையாடியது
ஒரு கன்று
கடலுக்குள்ளிருந்து கடலுக்குள்
நகரத்துவங்கியது விசைப்படகு
துள்ளாத கன்றுகளுடன்’.

’ சாவு வீட்டின் முற்றத்தில்
விளையாடுகின்றன
இரு அணிற் பிள்ளைகள்
அழுதுகொண்டிருந்த சிறுமி
அணில்களைப் பார்த்துக் கொண்டே
அழுகிறாள்
சற்று நேரம் கழித்து
எதற்காக அழுகிறோம் என்றே
தெரியவில்லை அவளுக்கு
முற்றத்தில் இப்போது
மூன்று அணில்கள்’.

’கழிவுகள் தின்று மிதக்கின்றன
மீன்பிள்ளைகள்
கடைசி மீன்குஞ்சு கழிவை நோக்கி
நீந்துகிறது மிக வேகமாய்
தன் தளர்ந்த மடுவைப் பார்த்தபடி
அமைதியாய் படுத்திருக்கிறாள்
கடல்’.

’அலையடித்து அலையடித்து
ஓய்கிறது கடல்
தொலைவில் ஒரு ஈரம் பொதிந்த
பொம்மை மிதந்து வருகிறது
மிக அருகிலிருக்கிறது
தீவு
அங்கே குறைந்துகொண்டே இருக்கிறார்கள்
குழந்தைகள்’

- நிலாரசிகன்

வாழ்த்துகள் நண்பா...

1 comment:

  1. தமிழுக்கு அழகு சேர்த்த வரிகள்!

    ReplyDelete