ஹிப்போவின்
குட் மார்னிங்
1.
வகுப்பறை
உண்மையில்
சொல்வதானால் நான் ஒரு மாணவனாக வகுப்பறைகளில் கற்றுக்கொண்டதைவிட ஆசிரியனாகக் கற்றுக்கொண்டதே
மிகுந்த அடர்த்தியானது எனலாம். இதன் அடிப்படையில் பிள்ளைகளிடையேயான எனது அனுபவத்தை
நான் இப்படி எழுதினேன் ‘என்னை ஆசிரியனாக்கிய எனது மாணவர்கள்…’. ஆம் இது நான் மனப்பூர்வமாகச்
சொல்கிற உண்மைதான்,
ஓவ்வொரு
பிள்ளையும் வெவ்வேறு வாழ்வுச் சூழல்களின் பிரதிநிதிகள், இதில் கடினமான சமூக அமைப்பு,
அவர்களின் மீது கவிழ்க்கப்படும் கடினமான எதிர்பார்ப்புகள், கடினமான பெற்றோர் ஆகியவையும்
அடங்கும். முதல் நாள் வகுப்பிலேயே இவை யாவற்றின் தாக்கங்களையும் எல்லாக் குழந்தைகளிடமும்
காண முடிந்தது.
எத்தனை
அபத்தம் இது? பிறத்தலும் இறந்துவிடுதலும் எல்லா மனிதருக்கும் பொது என்கிறபோதும் வெறும்
சூழல் காரணிகள் வித விதமான மனிதர்களைச் சமைத்துவிடுகிற சமூக அமைப்பை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
ஆனால்
குழந்தைகளின் உலகம் பொதுவில் சொல்வதைப் போல உண்மையில் வேறுதான், சூழல் எதுவாகிலும்
அதற்கான பிரதிநிதித்துவத்தை நாம் அளித்துவிட்டால் போதும் அவர்களின் மனங்களை ஆள்வதற்கான
உரிமையை எளிதில் தந்துவிடுகிறார்கள்.
ஆசிரியனாக
அன்று எனது முதல் நாள் … காட்சிகள் மங்கி, தொண்டை வறண்டு அந்தரத்தில் துள்ளி அழுதபோதும்
விடாமல் அப்பா, ஒரு கையில் சிலேட், பல்பம், ஒரு ‘ஃபை ஸ்டாரை’யும் இன்னொரு கையில் எனது
இடது கையினையும் பிடித்தபடி துள்ளத் துடிக்க பள்ளியில் கொண்டுவந்து விட்டுவிட்டுப்போனது
நினைவுக்கு வந்தது.
கால அட்டவனைப்படி
எனக்கு நான்கு வகுப்புகள் தரப்பட்டிருந்தது, சுமார் நூற்றியைம்பது மாணவர்கள், சூழல்
விளைவித்தப் பிஞ்சுகள். அனைவரையும் என் ஒருவனுக்கான அலைவரிசைக்குத் திருத்தம் செய்யவேண்டும்,
வாழ்வுச் சூழலுக்கு எதிரான வகுப்பறைச் சூழல். எத்தனை மலைப்பானக் காரியம்?!
மதிப்பெண்கள்,
கண்டிப்பு, தண்டிப்பு வகைகளாலான ஆயுதங்கள் சகிதம் முதல் நாள் வகுப்பறைக்குள் நுழைந்தேன்.
கை கொண்டிருக்கிற ஆயுதங்கள் எதுவும் நான் பயன்படுத்தி அறியாதவை. ஆனால் பிள்ளைகள் “அட,
உள்ள வாங்க சார், பார்த்துக்கலாம்” என்பதாக அத்தனை எதார்த்தமாக அமர்ந்திருந்தனர், செயற்கையான
அமைதி உண்டாக்கப்பட்டது. எனக்கு அவர்கள் பேசிக்கொண்டிருந்தால் நன்றாக இருக்குமாக இருந்தது.
பதட்டம் அவமானமாகிவிடாமல் பார்த்துக் கொள்வதொன்றே அப்போதைக்கு எனக்கு மாபெரும் இலக்காக
45 வது நிமிடத்தினருகே மின்னியது.
பதட்டம்,
குடும்பத்திற்கு வெளியேயான முதல் தனிமை, முதல் சிறகசைப்பிற்காக பிஞ்சு றெக்கைகளுடன்
சமூக வெளியில் தள்ளிவிடப்பட்ட நிலை என முதல் நாள் வகுப்பறை என்பது குழந்தைகளுக்கும்
ஆசிரியனுக்கும் ஓன்றாகவே இருக்கிறது என்பதை பின்னாளில் நான் உணர்ந்துகொண்டேன். ஆசுவாசப்படுத்திக்கொள்ள
முதலில் அறிமுகச் சம்பிரதாயம் ஆரம்பமானது. குழந்தைகள் ஒவ்வொருவராகத் தன்னைச் சொல்ல
ஆரம்பித்தார்கள்.
“பார்த்தன்
என்றால், புராணத்தில் வரும் அர்ச்சுணன் கதாபாத்திரம், சாரதி என்றால் தேரோட்டுபவர்,
அர்ச்சுணனுக்குத் தேரோட்டியது கிருஷ்ணனாக அவதாரம் கொண்ட காக்கும் கடவுளான விஷ்ணு, ஆக
கிருஷ்ணன் என்கிற பெயரைத்தான் இவருக்கு பார்த்தசாரதி என்று வைத்திருக்கிறார்கள் என்பதாக
ஒவ்வொரு பெயருக்கும் முடிந்தவரை வியாக்கியானங்கள் சொல்ல ஆரம்பித்தேன்.
ஒரு பிள்ளை
எழுந்து “சார், அப்ப அவரு டிரைவரா சார்” என்றான் வகுப்பறை முழுதும் சிரிப்பலை… உண்மையில்
திடுக்கிட்டுத்தான் போனேன். பிறகு சமாளித்தவனாக “ஆமா டா, நாம் பேருந்தில் போகும்போது,
எங்கயும் இடித்துவிடாமல் பத்திரமாக நம்மை ஊருக்கு கொண்டு சேர்ப்பது யார் என்றேன்,
“டிரைவர்… சார்” என்றார்கள்.
அப்படியானால்
காக்கும் கடவுள் என்று சொல்லப்படுகிற விஷ்ணுவும் டிரைவர்தான் என்றேன். இப்போதும் சிரிப்பலை,
ஆனால் அலை இன்னொரு கறையை மோதியது.
சில பெயர்களுக்கு அர்த்தம் தெரியாமல் சமாளித்தேன்,
ஒரு வழியாக வகுப்பு முடிக்கையில், அரவிந்த் எழுந்து “உங்க பேருக்கு என்ன அர்த்தம்”
சார் என்றான். ஆஹா மாட்டிக்கொண்டேன், சுரேஷ் க்கு என்ன அர்த்தம்? இதுவரை நான் யாரிடமும்
கேட்டதுமில்லை, தெரிந்துகொள்ள ஆசைப்பட்டதுமில்லை.
நமது அறிவின்
எல்லைகளை உடைத்து திசைக்கொருவராக இழுத்துச் சென்று விசாலமாக்குபவர்கள் வேறு யாரையும்
விட மாணவக் குழந்தைகளே என்று புரிந்தத் தருணம் அது.
“இப்படி,
யோசிக்காமல் கேள்வி கேட்டு, குட்டிப் பசங்களிடம் மாட்டிக்கொள்பவன்” என்று அர்த்தம்.
சொல்லிவிட்டு, அவர்களுக்குக் கேட்கும்படியாக வடிவேலு அவர்கலின் தொனியில் “எப்படியெல்லா…ம்
சமாளிக்க வேண்டியுள்ளது, அவ்…” என்றேன்.
பெரும் சிரிப்பலை…” அது உங்களை நாங்கள் ஆட்டத்தில்
சேர்த்துக்கொள்கிறோம் என்பதாக இருந்தது.
அட! நான்
ஆசிரியன்…
எனது முதல் நாளின் முதல்
பாடவேளை முடிந்தது.
No comments:
Post a Comment