Wednesday 5 September 2018

2. முதல் பாடம்.

ஹிப்போவின் குட் மார்னிங்
1.          முதல் பாடம்.

றிமுகம் அப்படி இப்படி என்று சமாளித்து முதல் நாள் முடிந்தது, 7-9 வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் ஆசிரியர் பணி. எனது பள்ளிக் காலங்கள் முழுக்க முழுக்க தாய் மொழி தமிழ் வழியிலானது. ஆனால் பணி வாய்த்திருப்பது மெட்ரிக் பள்ளி, முழுக்க ஆங்கில வழி. அப்போது சமச்சீர் முறை கொண்டு வந்திருக்கவில்லை. அப்போதைய மெட்ரிக் பாடங்களை ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற முன்னணி பல்கலைக் கழக பதிப்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
முன்னதாகவே தயார் செய்துகொள்வதற்காக புத்தகங்களை வாங்கி வந்திருந்தேன். வீட்டில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தவுடன், இனிமேல்தான் கூத்து ஆரம்பம் என்று நன்றாகவேத் தெரிந்தது.
சிறு வயதில் புத்தகம் முழுதும் படங்களே இல்லாமல் இருந்தால் அது பெரிய க்ளாஸ் என்று சொல்லிக்கொள்வோம், எப்போது நாம் பெரிய வகுப்புகளுக்குச் சென்று அண்ணா ஆவது என்று ஏக்கமாக இருக்கும், 12 வது முடித்ததும் ‘13, 14, 15 லாம்’ படிக்கனும் என்று எண்ணிக்கொண்டு போனது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
ஆனால் இப்போது என் கையில் இருக்கும் 7ம் வகுப்பு புத்தகமே அண்ணாக்கள் புத்தகமாகியிருந்தது. ஆம் முழுக்க முழுக்க ஒரே எழுத்துக்கள், அதுவும் கரடு முரடான ஆங்கிலத்தில்… படங்களே இல்லை.
காலை நிர்வாகத்திடம் சென்று வேலைக்கு வரவில்லை என்று சொல்லிவிடலாமா என்று ஒரு எண்ணம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. கொண்டுவந்திருந்த 9ம் வகுப்பு புத்தகத்தைப் பிரித்தேன், மிரட்சி பயமாக மாறியது.
“மகனே, இன்னிக்கு ஒரு பக்கத்துக்குத் தயாராகிடு பார்க்கலாம், அப்புறம் நீதன் ராஜா” என்று பரிகாசம் செய்வதைப்போல மொடமொடத்தன அச்சுக் காகிதங்கள். அப்படி ஒன்றும் போகிற போக்கில் வேலையை விட்டுவிடும் குடும்பச் சூழல் இல்லை. படிக்கத்துவங்கினேன். கையிலிருந்தச் சொல்லகராதி வெகுவாகக் கலைத்துப்போனது. ஒரு வழியாக அடுத்த நாளுக்குத் தயாராகிவிட்டாலும் உச்சரிப்பு முறை பெரும் சவாலாக இருந்தது.
AA RI ரி YA PA DAI டை KA DA NTHA ந்த  NE நெ DU டு N ன் CHE செ ZHI ழி YA PA பா NDI ண்டி YAN யன். என எழுதி வைத்துப் படித்து மனசுக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். எல்லாம் சிறுவயதில் மளிகைக் கடைக்குச் செல்ல அம்மா கொடுத்தனுப்பும் லிஸ்ட்டை பார்க்காமல், கடைக்காரரிடம் கவுரவமாக பொருட்கள் வாங்க பயன்படுத்திய து.ப. ¼.கி. என்றால் துவரம் பருப்பு கால் கிலோ என்று மனனம் செய்த யுக்திதான்.
அடுத்த நாள் வகுப்பறை, குழந்தைகளுக்கு புது சமூக அறிவியல் ஆசிரியர் ஆசிரியரின் இரண்டாவது நாள். எனக்கு முதல் சவாலின் முதல் பாடவேளை. சமீராவை எழுந்துப் படிக்கச் சொன்னேன். “பயபுள்ள என்னா… சரளமா, படிக்குது” என்று திகைப்பாக இருந்தது. உண்மையைச் சொல்வதென்றால் குழந்தையின் வேகத்திற்கு என்னால் வரிகளின் பின்னால் ஓடமுடியவில்லை. ஆனால் ரட்சகனாக எனக்கு நம்ம பாண்டியன் வந்து நின்னார் பாருங்க…
“அ… அரியப்… பாடை…” என்று குழந்தை வழுக்கினாள்… இதுதானே வேண்டும், விடுவோமா… “அட பாடையில் என்னமா அரிது, எளிது எல்லாம்… என்றதும் சமீராவோடு எல்லோரும் சிரித்தோம். என்ன அழகானத் தருணம் அது.
பிறகு பிள்ளைகளிடம் ஒவ்வொருவராக பாண்டியன் பெயரை படிக்கச் சொல்லியும் யாரும் தடுமாறித்தான் போனார்கள். நமக்கு காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளாதக் குறைதான். “அது, அப்படி இல்லப் பா…”  என்று எனது முந்தைய நாள் பயிற்சியை போர்டில் எழுதினேன் ‘AA RI ரி YA ய…’  “சேர்த்துச் சொல்லுங்க ஆரிய படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன்” வகுப்புக்குள் பாண்டியன் வாள் சுழற்றினார்.
குழந்தைகள் மனதில் நான் நின்ற உயரத்த்ப் பார்க்க எனக்கே தலைச் சுற்றியது.
உண்மைகள் சுடும் என்பார்கள். ஆனால் அது குளிர் மழையைப் பொழியும் என்று அடுத்த சில நிமிடங்களில் நான் உணர்ந்தேன். உண்மைதான், “அந்தப் பெயரை அதற்கு முன்னால் நானும் அறிந்திருக்கவில்லை என்றும் முதல் நாள் வீட்டில் உங்களுக்கு போர்டில் எழுதியது போல நோட்டில் எழுதிப் பயிற்சி எடுத்துக்கொண்டுதான் வகுப்பில் உங்களுக்குச் சொன்னேன்” என்றதும் பிள்ளைகள் திகைத்துதான் போனார்கள். ஆசிரியர்கள் அதி மேதாவிகள் என்கிற போலியை உடைத்தத் தருணம் அது.
தொடர்ந்து, “ஆங்கில அனுபவமே இல்லாத நானே ஒருமுறை வீட்டில் பயிற்சி செய்தால் உங்கலுக்குச் சொல்லித் தரமுடிகிறது என்றால் முழுதும் ஆங்கில வழியிலேயே படிக்கும் உங்கள் யாருக்கும் இது ஒரு பெரிய விஷயமே இல்லை. எந்தவொரு பாடத்திற்கும் வீட்டில் பயிற்சி செய்வதுதான் முக்கியம்” என்றதும் கைத் தட்டினார்கள், மழை… மழை… மனம் சொன்னது,
“ஆஹா…, நீ ஆசிரியன் டா…”.

No comments:

Post a Comment