Friday, 7 September 2018

3. புதுபித்துக்கொள்ளுதல்

ஹிப்போவின் குட் மார்னிங்
3. புதுபித்துக்கொள்ளுதல்

ள்ளியில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. வளாகத்தினுள் ‘எங்க சுரேஷ் சார்’ என்கிற குரல்கள் ஆங்காங்கே ஒலித்தன. வேறெதனையும் விட பிள்ளைகள் நம்மைச் சுற்றி உண்டாக்குகிற பிம்பம் என்பது உன்னதமானது என்பதை நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். சாலைகளில், பல சரக்குக் கடைகளில், சுப நிகழ்வுகளில், திருவிழாக்களில் “வணக்கம் சார்…” என்று கைகள் குவிந்தன. யாரும் நான் அதுவரை சந்தித்திராத முகங்கள், என்னைவிடவும் வயதில், அனுபவத்தில் மூத்தவர்கள். பெற்றோர்கள்.
யாரால் இது கூடும்? பிள்ளைகள், அவரவர் குடும்பத்தில் என்னைக் கொண்டு சேர்த்திருந்தனர். யாரேனும் வணக்கம் சொல்லும்போது கவனியாமல் விட்டுவிடுவேனோ என்கிற பயம் வந்துவிட்டது. முன் கூட்டியே நான் வணங்க ஆரம்பித்தேன், இருக்கட்டுமே அவர்கள்தானே இப்படியான பிள்ளைகளை எனக்கு அளித்தவர்கள்?!
குழந்தைகள் ஏற்படுத்தியிருக்கும் மதிப்பு எந்தச் சூழலிலும் குறைந்துவிடக் கூடாதென்று மனம் தவித்தது. என்னை இன்னும் கூட அவர்களுக்கேற்றவாரு தகவமைத்துக்கொள்வதுதான் ஒரே வழி என்று உறுதியாய் நம்பினேன். உள்ளே புதுப்பித்தல் ஆரம்பம் ஆனது.
புதுபித்துக்கொள்லுதல் என்பது நிறைய படித்தல், அல்லது அதிகம் தெரிந்துவைத்துக்கொள்ளுதல் என்று தவறாக புரிந்துகொள்ளப் பட்டிருப்பதாகத் தோன்றியது. ஏனெனில் அப்படியான நிலையிலிருந்து அனுகும்போது குழந்தைகள் தொலைவில் இருந்தார்கள்.
குழந்தைகளுக்கு ஏற்ப நமது இயல்பைத் தகவமைத்துக் கொள்வதற்கான பிரயத்தனங்கள்தான் புதுபித்துக்கொள்ளுதல் என்று பிறகுதான் தெரிந்தது. அதுதான் அவர்களின் சின்னச் சின்ன அறியாமையை ஏளனம் செய்யாமல் உற்சாகப்படுத்திக் கற்றுக்கொடுக்க வைத்தது.
அபத்தமாக இங்கு கல்வியியல் கல்வியில் வைக்கப்பட்டிருக்கும் கல்வி உளவியல் என்கிற பாடதிட்டங்கள் கூட முன்னறிஞர்களின் அப்போதையத் தரவுகளை மனப்பாடம் செய்வதாகவே இருக்கிறது. தகுதித் தேர்வு எழுதி ஆசிரியராக வர நினைப்பவர் கூட, மதிப்பெண்களுக்காக மிகச்சிறந்த பயிற்சி நிறுவனங்களைத் தேடிக் கண்டு, ஒரு மதிப்பெண் விடைகளை மனனம் செய்துகொண்டிருக்கிறார். அதிலும் பலமுறைகள் தோற்று ஒருவழியாக தேர்ச்சிபெற்று பள்ளிகளில் பிள்ளைகளுக்கு மனப்பாடம் செய்தால் எப்படி மறக்காமல் இருப்பது என்று கற்பித்துக்கொண்டிருக்கிறார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது ஆசிரியரின் கற்பித்தல் யுக்திகளைப் பரிசோதிக்கும் தேர்வாக இருக்க வேண்டும் இல்லையா? பல்வேறு உளவியல் சிக்கல்கள் நிறைந்தக் குழந்தைகளை அனுகுவதற்கு ஆசிரியருக்கு இருக்கும் திறனை சோதிப்பதாக தகுதித்தேர்வு இருக்கவேண்டுமா அல்லது அறிவு வளர்ச்சிக் கோட்பாட்டை தந்தது யார் (பியாஜே) என்ற கேள்விக்கு நான்கில் ஒன்றைத் தேர்வு செய்வதாக இருக்கவேண்டுமா?
பொதுவான கற்றல் கற்பித்தல் கேள்விகளுக்குத் தகுதித் தேர்வு எழுதுபவர் கொடுக்கும் விடைகளை முந்தைய அறிஞர்களின் தரவுகளோடு ஒப்பிட்டு அதில் ஆகச்சிறந்த பதில் எழுதியவர்களை தேர்ச்சியாளர்களாக அறிவித்தால், தகுதித் தேர்வு என்பது எவ்வளவு அர்த்தம் நிறைந்ததாகும்.
பத்துக் கேள்விகளுக்கு ஒரு 40 பக்கங்களாவது எழுதட்டுமே?! தேர்வரின் எழுத்தாற்றலைச் சோதிக்காமல் நான்கு விடைகளில் ஒன்றைத் தேர்வு செய்யும் முறையில் தேர்ச்சியானவரை வைத்து, குழந்தைகளின் ஆக்கத்திறனையும், கையெழுத்து அழகையும் தீர்மானிக்கச் செய்வது நியாயமாக இருக்குமா? இதற்கெல்லாம் காலம் ஆகும், ஆகட்டுமே. எதிர்காலச் சமூக அமைப்பை கட்டமைக்கும் ஒரு தகுதியான சிற்பிதானே தகுதி என்பதன் நோக்கு?!  
ஆஸ்போர்ன், ஆல்பிரட் பாண்ரோ, சிக்மண்ட் பிராய்ட் முதல் காந்தி, ஜெ. கிருஷ்ண மூர்த்தி போன்ற பேரறிஞர்கள் வரையிலானக் கல்வி உளவியல் கோட்பாடுகளின் அறியத் தரவுகள் யாவும் ஓரு அற்புத முன்மாதிரிகள்.
ஆனால் அவர்கள் காலத்திய சமூக, கலாச்சார, பண்பாட்டு அமைப்பு, போக்குவரத்து, தகவல் தொடர்பு, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் குழந்தை வளர்ப்பில் அவற்றின் தாக்கமும் நிகழ்காலத்தோடு முற்றிலுமாக வேறுபடுகிறது.
அவர்கள் தரவுகளின் எல்லாக் காலத்திற்குமான பொதுத்தன்மைகளை ஆராய்ந்துத் தேர்ந்து, தருவித்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இன்றையக் காலத்தோடு பொருந்தும் இப்போதைக்கான புதிய உளவியல் கோட்பாடுகளை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கண்டுணரவேண்டும். அவற்றை செயல்பாட்டில் கொண்டுவரவும் வேண்டும்.
ஏனெனில் வளைதளச் சுட்டியில் தமிழ் என்று தட்டச்சு செய்தால் ‘தமிழ் செக்ஸ், தமிழ் ஆண்ட்டி, என்று முகத்திலறையும் நிர்வாணங்களைக் கடந்து இன்றையக் குழந்தைகள் தொல்காப்பியத்தை, சேக்‌ஷ்பியரை, x,y அச்சுகளை,  X.Y. க்ரோமோசோம்களை, வேலூர் புரட்சியை உள்வாங்க வேண்டியிருக்கிறது. இது தவிர, கல்வி முறை மற்றும் ஆசிரியர், மாணவர் குறித்த எதிர்மறைச் செய்திகளும் காட்சிப் பட ஆவணங்களோடு குழந்தைகளுக்கு நாள் முழுதும் திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.
ஆன்றாய்டு போன்களை வென்று, மடிக் கணினி கேங்ஸ்டர் விளையாட்டுகளை வென்று, நாளுக்கு நூறு ரூபாய்க்கும் மேலான பாக்கெட் மணியை வென்று, ஹார்மோன் சேட்டைகளை வென்றால் மட்டுமே இன்று ஒரு ஆசிரியர் குழந்தைகளை அனுக முடியுமென்றால் நாம் வாங்கிப் பெருமிதமடையும் முனைவர் பட்டங்கள் கூட புதுப்பித்துக்கொள்ளுதல் என்கிற நோக்கில் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறது.
இந்தவகையில், புதுப்பித்தல் என்பது நிறையத் தெரிந்து கொள்ளுதல் என்பதாக மட்டும் இல்லாமல், ஆசிரியர் ஒரு சமூக ஆக்கச் சக்தி என்பதை உணர்ந்து குழந்தைகளை இன்றைய உளவியல் அடிப்படியில் அனுகுதல், அதற்கேற்ற வகையில் தன்னைத் தகவமைத்துக்கொள்ளுதல் என்பதாகவும் இருக்க வேண்டுமென்று மூன்று ஆண்டுகளில் பிள்ளைகள் எனக்கு உணர்த்தியிருந்தார்கள்.

No comments:

Post a Comment