Sunday 9 September 2018

4. யார் பொறுப்பு


ஹிப்போவின் குட் மார்னிங்
4. யார் பொறுப்பு ?
வ்வப்போது இங்குக் குழந்தைகள் தான் எனக்கு கற்றுக்கொடுக்கிறார்கள் என்று குறிப்பிடுவதை கவுரமாகவே கருதுகிறேன். அதுதான் உண்மையும் கூட. ஒவ்வொரு பிள்ளையும் எனது சிந்தனை நியூரான்களை தங்கள் விருப்பத்திற்கு இழுத்துச் சென்றுவிடுகிறார்கள். அங்கிருந்துதான் புதிய ஒன்றை தாட்சண்யம் இல்லாமல் யோசிக்க முடிகிறது. அங்கிருந்துதான் பச்சாதாபம் இல்லாமல் நம்மையும் கூட விமர்சனம் செய்துகொள்ள முடிகிறது. இங்கு நாம் பேசவிருப்பது கூட அப்படியான ஒன்றுதான், சுய பரிசோதனை.
இன்று மனித உரிமை என்பது குழந்தைகளுக்கு வேறொருக் கோணத்திலிருந்து கற்பிக்கப் படுகிறது. மனித உரிமைக்கும் ஆசிரியர் மாணவர் உன்னதமான உறவுக்குமான வேறுபாடுகள் புரிவதில்லை, செதுக்குதல் வன்முறையாகப் பார்க்கப்படும் அதே வேளையில் வன்முறையை செதுக்குவதாக சொல்லிக்கொள்வதும் நிகழ்ந்தேருகிறது.
ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோராக வாழ விதிக்கப்பட்டவர்களே அதுபோலவே எல்லா பெற்றோரும் தமக்குள் இருக்கும் ஆசிரியரை வாழ்விக்கவேண்டும்.
ஆனால் இதில் ஆசிரியருக்கே அதிகக் கடமையும் தார்மீகப் பொறுப்பும் இருக்கிறது, இன்றையப் பெற்றோர் நேற்றைய மாணவர்கள் என்பதுதானே மறுக்கமுடியாத உண்மை?
சற்று நேர்மையாக நாம் இப்படி யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயத்தை உணரலாம். ‘ஒருவேளை இன்றையச் சமூகச் சூழல் அவலமானது என்றால், நேற்றைய மாணவச் சூழல் முறையாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்றுதானே அர்த்தம்’?.

ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டிய சமூகப் பொறுப்பு என்பது மற்ற யாவற்றிலும் முதன்மையானது. தவிர அது சற்றேப் பிசகினாலும் பெரும் சீரழிவுகளைத் தந்துவிடுகிற தீவிரம் கொண்டது எனவும் கூறலாம்.
சராசரியாக ஒரு மேல்நிலை வகுப்பில் 4 அல்லது 5 மாணவர்கள் எழுத்துக்கூட்டிப் படிக்கவேத் தெரியாதவர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்தச் சராசரிக்கு மேலான மீதி குழந்தைகளும் கூட துவக்க வகுப்பில் பள்ளிக்கு வரும்போது எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்தானே?
எல்லாக் குழந்தைகளுமே, பள்ளிக்கூடம், வகுப்பறை, ஆசிரியர், கனவு, எதிர்காலம், முதல் மதிப்பெண் என்கிற எந்தவொருக் கல்வி வரையரைகளாகச் சொல்லப்படுவதையும் அறிந்திராத வெள்ளந்தியான மனங்களுடன்தானே பள்ளிக்குள் நுழைந்தார்கள்?
அதன்பின் ‘அங்கே, அம்மா, அப்பா இருக்கமாட்டார்கள், புடவை, பேண்ட், சர்ட், அணிந்தப் பெருசு பெருசான ஆட்கள் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் அழாதே, பேசாதே, எழுந்திருக்காதே, திரும்பச் சொல், படி என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்பதாக மட்டும்தானே பள்ளிக்கூடம் பற்றிய அவர்களின் துவக்கக் கால அனுமானமாக இருந்திருக்கக் கூடும்?!
எனில் பிறகெப்படி எழுத்துக்களும் வார்த்தைகளும் ஒரு குழந்தைக்கு எளிதெனவும் இன்னொருக் குழந்தைக்கு அரிதெனவும் மாறியது? அவர்களிடையே கற்றல் வேகம் வேறுபட்டிருக்குமே தவிர கற்றுக்கொள்ளவே முடியாமல் ஆகியிருக்காதே? அப்படியே இருந்தாலும் மேல்நிலை வகுப்புகள் வரையிலும் ஒரு பிள்ளை எழுத்து முகமே அறியாமல் வந்துவிடுவது என்பது ஏதோ அல்லது எங்கேயோ தவறு என்று மட்டும் சொல்லிவிடமுடியாது. அது அவர்களுக்கு நேர்ந்துவிட்ட அநீதி.
அவர்களை அறிவுக் குருடர்களாக மாற்றியது எது, யார்? பெற்றோர், சூழல் என எத்தனைக் காரணிகளை முன்வைத்தாலும், அந்தக் குழந்தை அதுவரை தனது கல்விச் சூழலில் சந்தித்த ஆசிரியர்கள் என்ன செய்தார்கள் என்கிறக் கேள்வியை என்ன செய்யப் போகிறோம்? உணர்வு வயப்பட்டு இந்தக் கேள்விக்கு எந்த பதிலை எத்தனித்தாலும் அதனை நமது நெஞ்சுக்கு நேரே சொல்லிப்பார்த்துக்கொள்வது ஒன்றுதான் நம்மை வரும் காலத்திற்கான குறைந்தபட்ச தீர்வையேனும் சிந்திக்க வைக்கும்.
சமூக வெளியில் ஒரு போக்கிரியைப் பாருங்கள், வாயில் பாக்கைக் குதப்பிக்கொண்டு, கண்ணில் படும் யாரையும், எதனையும் அலட்சியம் செய்துகொண்டு, பழிச் செயல்களுக்கு அஞ்சவேப் போவதில்லை என்பதானத் தீர்மானமானத் தோற்றம் இல்லையா, இன்னொரு புறம் நல்லவர் தோற்றத்தில் ஒளிந்திருந்துக் குழந்தைகளைத் திண்ணும் அரக்கனையும் பாருங்கள், தலையினைக் கொண்டுவந்துக் காவல் நிலையத்தில் வீசிப்போகும் காட்சியைப் பார்த்திருப்பீர்கள்தானே, தெருவில் கொடுவாளால் திரும்பத் திரும்ப ஒருவரை வெட்டிக் கொண்டிருக்கும் கும்பலைப் பாருங்கள், சங்கிலியை விடாமல் பிடித்திருக்கும் பெண்மணியை வாகனத்தில் இழுத்துச் செல்லும் ஒருவனைப் பாருங்கள்… இன்னும்…
இவர்கள் சமூகப் பிழை என்றால் இந்தப் பெரும்பிழையைச் செய்துமுடித்தது வெறும் ‘ப்ளா ப்ளா ப்ளா’ சமூகக் காரணிகள் தானா?
அப்படியே இவர்களது கடந்தக் காலங்களை கற்பனை செய்துபாருங்கள். அங்கு “ஹாய், குட்டி இங்க வா, அப்பாக்கிட்ட வா” என்றதும், தத்தக்கா பித்தக்கா என்று விழுந்து எழுந்து ஓடிச்சென்று அப்பாவைக் கட்டிக்கொள்ளும் குழந்தைகள் தெரிகிறார்களா? ஆம் அவர்கள்தான் இவர்கள்.
சமூகக் காரணிகளை மட்டும் இவற்றிற்கெல்லாம் காரணங்களாகக் காட்டித் தப்பித்துக்கொள்ள முடியாது. அந்தக் குழந்தைமையைக் காப்பாற்றி, பிள்ளைமையை நேர் செய்து, மனிதனை சமூகத்திற்கு அளித்திருக்க ஒரு ஆசிரியரால் முடிந்திருக்கும்.
ஏனெனில் எல்லாச் சமூகக் காரணிகளையும் செய்துவிட முடிகிற ஒரு அடிப்படைக் காரணி, ஒரு பேராற்றல் ஆசிரியர் மட்டுமே.
இந்தக் கருத்துக்கள் விமர்சனமல்ல, பயம். இன்றையக் குழந்தைகள் என்னவாக இருக்கிறார்கள், இவர்கள் ஒன்று கூடி கட்டமைக்கவிருக்கிற நாளையச் சமூகம் எப்படியாக இருக்கும் என்கிற பயம்.
ஓ, ஆசிரியப் பெருந்தகையீர்… நாளையச் சமூகம், இன்று பிள்ளைகளாக நம்மிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment