Monday 10 September 2018


குங்கிலியம் மனக்கும் காடு -இளங்கவி அருள்
கவிதைத் தொகுப்பை முன்வைத்து...


51 வயது இளங்கவி அருள், கவிஞருக்கு இது ஆறாவது கவிதைதத் தொகுப்பு. முதலில் அந்த மனோபாவத்திற்கு பாராட்டுகள். புதினங்களும், சிறுகதைகளும், கடுரைகளும் முறையே வகைவகையான படைகள் என்றால் இவையாவற்றையும் உள்ளே ஒருங்கமைத்துக்கொள்ள முடிகிற கவிதை படைப்புப் பிரதேசத்தின் தளபதி எனலாம். தவிர தளபதிகள் மன்னனாகவும் கூடும் ! இக் கவிதைத் தொகுப்புகள் தவிர தோழர் இளங்கவி அருள் கட்டுரைத் தொகுப்பு ஒன்றையும் தந்திருக்கிறார்.

அரசுத்துறை ஊழியர் அதே நேரத்தில் ‘மீறல்’ இலக்கியக் கழக செயல்பாட்டாளர். டிஜிட்டல் ஜனநாயக ரீதியில் சொல்வதானால் நகர, கிராம, வார்டு, தெரு அல்லது முட்டுச் சந்து தீவிரவாதிகளுள் ஒருவராக இருக்கிறார், அதற்கும் அவருக்கு வாழ்த்துக்கள்.

வரவிருக்கும் எனது ’கடைசி தூர தேசத்துப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை’ தொகுப்பிற்கு அணிந்துரை கேட்கையில் அதெல்லாம் எழுதுவதில்லை என்று மறுக்காமல் பலச் சூழல்களை விளக்கி, “தோழர் புத்தகம் வந்ததும் தாருங்கள், என்னுடைய நேர்மையான விமர்சனங்களை நிச்சயம் வழங்குவேன், இன்றையச் சூழலில் விமர்சனங்களுக்கானத் தேவையே அதிகம் இருப்பதாகக் கருதுகிறேன்” என்றார் புதிய மாதவி., அருமை அல்லவா, எத்தனை நிதர்சனமான விளக்கம் என்பதுணர்ந்தத் தருணத்தினாலான எனதுக்  கண்களை உங்கள் முகங்களில் பொருத்த முயற்சிக்கிறேன், படைப்பாளி உள்ளிட்ட இந்த அமர்வு சகித்தருள வேண்டுகிறேன்.

’உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுவார் உறவு வேண்டாம் என்ற கவிஞன் எவ்வளவு அனுபவித்திருப்பான்’ என்கிற கவிஞரின் பார்வை, இந்தத் தொகுப்பைப் பேசுவதற்கு எனக்குக் கொடுத்த சுதந்திரத்திலிருந்து நான் துவங்குகிறேன்.

குங்கிலியம் மணக்கும் காடு: இந்நூலின் அட்டை வடிவமைப்பு வடிவமைப்பாளரின் மேதைமையையும் நூலாசிரியரின் பொருத்தருளும் அல்லது ஏற்றுக்கொள்ளும் மனசையும் காண்பிப்பதாக அமைந்துள்ளது. உள்ளே தலைப்புகளுக்கும் கவிதைக்குமான அலைவரிசை சற்று பிசகியிருக்கிறது. சன்னமான எழுத்துப் பிழைகளும் கானப்படுகின்றன. இவையெல்லாம் படைப்புச் சாரம்சத்தின் கூறுகள் அல்ல என்றபோதிலும் நூல் அளித்தல் (presentation) முறை என்பது வரவேற்பறை என்பதாலும் கவிஞருக்கு இது ஏழாவது நூல் என்பதாலும் குறிப்பிடலாம் என்றுத் தோன்றுகிறது.

கவிஞர் குறித்தத் துள்ளியமான அவதானிப்பில் நிமோஷினி அவர்கள் எழுதியிருக்கும் அணிந்துரை படைப்புகளுக்கு நம்மை வலுக்கட்டாயமாக அல்லாமல் உரிமையாகக் கை பிடித்து அழைத்துச் செல்கின்றது. இந்நேரத்தில் அவருக்கு நன்றிகள்.

’பட்டத்து யானைகள் பிச்சைக் கேட்பது (பட்டத்து யானைகள் பிச்சை கேட்குமா…?) பரிதாபம் தான் இதில் யாரின் மீது கோபம் கொள்வது யானையின் மீதா ? பாகனின் மீதா ?’, ’எழுத்தும் சிந்தனையும் என்ன மாற்றத்தை இதுநாள் வரை உண்டாக்கியது’ என்பன போன்ற அவரது தலையங்க ஆதங்கம் எதிர் கேள்விகளுக்கு உட்பட்டது என்றாலும் படைப்புகள் குறித்த நமது முன் அவாதானிப்புகளை, இப்படி உருவாக்குகிறது : ‘கவிதைகள் சமகால அரசியலை, சாமானிய வாழ்வை, சமூகத்தை பேசவிருக்கின்றன’. உள்ளே இப்படியான நமது அனுமானங்களைப் பேசுகிற கவிதைள் மின்னவும் செய்கிறது. ஆனால் மைதுனத்தின் கவிச்சி ஒரு கிரகணம் போல தொகுப்பை ஆக்கிரமித்து இருளாக வியாபிக்கிறது.

சுமாராக 15 ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம் என்று கருதுகிறேன், கட்டுடைத்தல் என்கிற போக்கில் தத்தமது அபிலாசைகளை படைப்பாம்சமாக நிறுவ முயன்று அதன் மூலமாக ஒரு வித சலனத்தை ஏற்படுத்த முயன்ற படைப்பாளர்களின் மீது ஸ்பாட் லைட் வீசப்படுவது என்பது அடிப்படை இலக்கியச் செயல்பாடாக ஆக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் பெண்ணியம் என்பது உடலைப் பேசுவது என்பதாக புதியதொரு பொருண்மைக்கு ஆளாகியிருந்தது. அவர்கள் வெளிக்காட்டிய உடலை ஒப்பனைகளின் பின்னிருந்து படைப்புலகு வெகுவாக இரசித்தக் காலமாகவும் அது இருந்தது எனலாம். அந்தச் சூழலில் என்போன்றோர் கவிதையின் நிர்வாணத்தின் முன் சஞ்சலத்தோடு நின்றோம். ஒரு வேளை இதுதான் கவிதையோ ?! என்கிற குழப்பத்தில் முகத்தை மூடியிருந்த விரல்களினிடையே சந்துக்கள் உண்டாக்கி அடன் வழியே விட்டு விட்டு கவிதையை தரிசிக்கவும் செய்தோம்.

ஆனால் ஒரு புறம் மனதுள், உடலைப் பேசுவதான கட்டுகளைத் தகர்ப்பதுதான் நவீன, பின் நவீன இத்தியாதிகள் என்கிற மனநிலை மாறுகிற போதுதான் சமூகத்தை, சமகாலத்தை, அரசியலை, அழகியலைப் பாடுகிற நவீனத்தின் முகடுகளை நாம் தொட முடியும் என்கிற நம்பிக்கையும் அசீரிரியாகக் கேட்டுக்கொண்டிருந்தது. கவிச்சையை நவீனமாக்குவது அல்லது கவிச்சைதான் நவீனம் என்றாக்குவது தவிர்க்கப்படவேண்டும் என்கிற ஏக்கம் உண்டாகிவிட்டது எனலாம்.

ஏக்கம் தேடலாக மாறி ரமேஷ், பிரேம், மாலதி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி… என்போரிடமிருந்து விடுவித்துக்கொண்டு ஆத்மா நாம், விக்கிரமாதித்தியன், தேவதச்சன், தேவதேவன், யுவன், கண்டராதித்தன், சிறி நேசன் என்பதாக பயணம் அமைந்தது… அப்பயணத்தின் வழி நெடுகிலும் அத்தனை ஆதூரமான கவிதையின் கூறுகள், அவர்கள் உடலைப் பேசாமலில்லை ஆனால் உடல் அங்கு சிற்பமாக இருந்தது.

இந்தத் தொகுப்பில் பல கவிதைகளை வாசித்த பின், வியர்வை நெடியிலிருந்து வெளியேறி ஆசுவாசம் கொள்ளும்போது நறுமணத்திற்கான ஏக்கம் பீடிக்கிறது. ஆனாலும் மூலையில் பிசுபிசுக்கும் வியர்வையின் ஈரத்தை தொடர்ந்த கவிதைகள் மிகுதியாக்கிவிடுகிறது. படைப்பின் இயங்குதளம் தனக்கான மொழியை தானே தெரிவு செய்யவேண்டும் என்பது எனது கருத்து. அப்படி படைப்பு தனக்கான மொழியை அதுவாகவே தேர்ந்து கொள்ளும்போது நியாயப்படுத்துதலுக்கான அவசியமின்றி, தாட்சன்யங்களைக் கடந்து படைப்பு அதன் நோக்கில் பயணித்துக் கொண்டிருக்கும் என்பதை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

அதே நேரத்தில் கவிஞரின் சில வரிகளில், கைவிடப்பட்ட கப்பலின் அருகே மிதக்கும் பெயர் தெரியாத மிதவையாகத் தளும்பும் சமூக, அரசியல், அழகியல் அவதானிப்புகளை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.

பக்கம் 22 ல் ‘இன்றைய பொழுதைக் கழிக்க’ கவிதை, வாழ்வியலில் மதங்களின் குறுக்கிடல்களின் மீது ஒரு விசாரனையை போகிற போக்கில் கொளுத்தி எறிந்துவிட்டுப் போகிறது. ‘பிள்ளைக் கறி தின்றவனை வரைந்தவன், மன நோய்க் காரணாகத்தான் இருக்கவேண்டும்’ என்கிற வரிகள் பேச முற்படும் அரசியலை கவனித்துப் பாருங்கள், உங்கள் குளத்தில் வட்டங்கள் தோன்றுவதை உணரலாம்.

‘கழிவிறக்கம் பொங்கிப் பிரவாகம் ஆகும்போது அது கூட்டுக்குள் ஒடுங்குவதற்குப் பதில் சில நேரங்களில் தனது புறச் சூழல்களுக்கான விமர்சனங்களாக மாறிக் கறை உடைக்கிறது. ‘உயிர் வலி அறியாது’ கவிதையில் நாம் அதைக் காணலாம். இந்தத் தொனியிலான வேறு சிலக் கவிதைகளும் தொகுப்பில் இருக்கின்றன.

‘ஒரே சத்தம்’ கவிதையில ‘கனவுகளின் குறியீடு சமன் கோடுகளாய் உருவாகாதவரை’ என்று சொடுக்கப்படும் சாட்டை, மாட்டிறைச்சியை மருந்தாக்கச் சொல்லும் ‘கருணை மிகு பூவுலகு’, தசை தொங்கிய யானைகளின் எல்லைகளைச் சுருக்கி, வீதியுலா அழைத்து வரும் பாகன்களைக் கேலியாக்கும் ‘கால நிர்பந்தம்’, விசுவாசம் செய்யும் அடியாட்கள் வைத்துக்கொண்டு உபதேசம் செய்யாதீர் என்று சொல்லும் ‘மீறிடும் தீக்குழம்பு’  போன்ற கவிதைகள் வரை சுளீரிடுகிறது.

அரசியல் கவிதைகளில் வெடிக்கும் ஆக்ரோஷம் அம்மாவை, அன்பை, நட்பைப் பேசும்போது பூனைக்குட்டிப் போல குழைந்து உரசுகிறது. ‘நட்பின் வெளிச்சம்’ கவிதை வரிகள் அதற்கு ஓரு உதாரணம்., ‘பனை மரம் தடவிக் கடக்கும் நிலவு, நட்சத்திரங்களை நீரில் கொறிக்கும் மீன்கள்’ ஆஹா என்ன ஒரு அழகியல்…

‘நாட் குறிப்பில் நிறையும் அவன்’ கவிதை பெண்ணியமாகப் பயனித்து கழிவிறக்கமாக முடிவது நெருடலானது என்றாலும் சுற்றத்தின் துரோகம், குழு அரசியலின் தனிமைப் படுத்துதல் என வாழ்பானுபவங்களின் பதிவுகள் வாசகன் தன்னச் சரி பார்த்துக்கொள்வதற்கான வாய்ப்பினைத் தருகின்றன.

‘பிரேதப் பரிசோதனைக்கு முன் / பின் கவிதைகள் முக்கியமானவை அதில் ‘முன்’ பற்றிப் பேசும் கவிதை சலனைத்தை உண்டாக்குகிறது.

எல்லாவற்றிலும் எனக்குச் செல்லப் பிள்ளையாக நான் தேர்ந்து கொண்டது பக்கம் 58 ல் உள்ள ‘பாலைக்கும் நெய்தலுக்கும் ஊரும் பல்லி’ கவிதை. ஆனால் பிள்ளைக்கு திருஷ்டிப் பொட்டு போல மூன்றாம் வரியிலும் மீண்டும் ஆறாம் வரியிலும் ஊர்கிறது பல்லி. அத்துடன் கவிதைக் கட்டமைப்பை பலவீனமாக்கி நம்மை உள்ளிருந்து இழுத்துப் போட்டுவிடுவதாய் எட்டாம் வரியில் ’சொல்லி’ என்கிற வார்த்தை இருப்பதாகக் கருதுகிறேன்.

இன்னும் பல கவிதைகளில் இதுபோன்று இருப்பதென்பது நாம் ஆரம்பத்தில் பார்த்த அளித்தலில் (presentation) நாம் அக்கரை கொள்ளவில்லையோ என்கிற மன நிலையை வாசகனுக்கு தந்துவிடலாம் என்பதையும் மேலும் அவசியத்தின் பொருட்டு கவிதையை பத்திகளாக ஆளிப்பது நவீன படைப்புகளுக்குத் தீட்டாகாது என்பதனையும் பரிசிலிக்க வேண்டுமாய் கவிஞர், சகோதரர் அவர்களுக்கு எனது வேண்டுகோளாக வைக்கிறேன்.

இத்தொகுப்புப் பற்றி நானோ மற்றவரோ எழுதுவதைக் காட்டிலும், கவிஞரே அழகான கருத்துரையாய் அடர்த்தியான விமர்சனமாய் கவிதையொன்றை எழுதிக்கொண்டிருக்கிறார் ?! பக்கம் 50 ல் உள்ள ‘நவீன காளான் மரம்’ படிக்கும் போது எனக்கு அப்படித்தான் தோன்றியது. ஆஹா என்னவொரு எளிமையான மனிதர் இவர், என நேசிக்கத் தோன்றுகிறது. இந்தக் கவிதையை அவர் தன்னை நோக்கிச் செலுத்துவதான தருணங்கள் கற்பனித்துப் பார்த்தால், அது நிச்சயம் சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும், ஏனெனில் இந்தக் கவிதைதான் அவர்.

புத்திமான்களே அவசரப் படாதீர்கள், உங்களெதிரில் கண்ணாடிதான் இருக்கிறது.

அன்பிற்குறிய தோழர் இளங்கவி அருள் அவர்களுக்கு, எனது பூரண அன்பும் வாழ்த்துக்களும்…
நன்றி,

யியற்கை. 02.09.2018 / 16 :52.  

No comments:

Post a Comment