Monday, 10 September 2018

ஹிப்போவின் குட்மார்னிங்


5. கெட்ட வார்த்தைகள் - 1


ள்ளி வளாகம். உண்மையில் சொல்வதானால் அது குணாதிசயங்களின் பல்கலைக் கழகம். ஆயிரம் குணங்களில் நிச்சயம் நீங்களும் இருப்பீர்கள். இந்த ஆயிரம் குணங்களும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து, பிரிந்து, மோதி, பிணைந்து நிகழ்த்துகிற சம்பவங்களின் ஒரு நாள் என்பது பள்ளிகளில் வாழ்வு வாய்க்கப்பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமேயான பிரத்தியேக வரம் என்று சொல்லலாம்.
மதிய உணவு இடைவேளை, நான் பின்னால் வந்து கொண்டிருப்பது தெரியாமல் கடும் உணர்வு வயப்பட்டவனாய் எதிரிலிருப்பவனை மோசமானக் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தான் பிள்ளை ஒருவன். சூழ்ந்திருந்த மற்ற பிள்ளைகளின் சலனங்கள் வழியே திரும்பியவன் என்னைப் பார்த்ததும்... பாவம் முகம் வெளிரிப்போய்விட்டது. அருகில் அழைத்தேன்.
“சார், சாரி சார், அவன்தான் சார் முதலில்… சார் இனிமேல் பேசமாட்டேன் சார்…” என்று அவனாகவே அனிச்சையாய் பேச ஆரம்பித்தவன். மாணவர்கள் சூழ்ந்துக் கொண்டதும் ஒருவித இறுக்கத்தை உணர்ந்தவனாய் அழ ஆரம்பித்துவிட்டான். கன்ணீர் மல்க “சார்… சார்…”
அவனதுக் கையைப் பிடித்து இழுத்து தோளோடு அணைத்துக்கொண்டேன். பயத்தில் அழுதவன் இப்போதுக் குழைந்து அழுதான். “சார், எப்பவும் என்னைக் கிண்டல் செய்துகொண்டே இருக்கிறான் சார்” என்றான் அழுதபடி. மற்ற பிள்ளைகளை கலைந்து போகச் செய்துவிட்டு “சரி, விட்றா, எல்லாரும் பார்க்கிறாங்க பார், அழாதே” என்றேன். அவனோ இன்னும் என்னை நம்பாதவனாய் “சார், இனிமேல் பேசமாட்டேன் சார்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.
“டேய் விட்றான்னா…” என்று கொஞ்சம் அதட்டலாகச் சொன்னதும் நிதானமானான். தொடர்ந்து “நீ பேசியதும் தமிழ்தான். தமிழ் நம்ம மொழியில்லையா, நாமளே இப்படிப் பேசி கொச்சையாக்கலாமா, இனி பேசாதே” என்று முதுகில் தட்டி அனுப்பிவிட்டேன்.
ஏற்கனவே ஒரு நாள், இவன் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டதாக சிவசூர்யா புகார் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. அடுத்த வகுப்பு 9பி தானா என்று பார்த்துக்கொண்டிருக்கையில் பாடவேளை துவங்குவதற்கான மணி ஒளித்தது.
உள்ளே நுழைந்து குழந்தைகளோடு வணக்கம் சொல்லிக் கொண்டதும், நேற்றைய பாடத்தின் தொடர்ச்சியாக மஹாவீரரின் மூன்று ரத்தினங்களைத் துவங்கினேன்.
பாடத்தினூடாக நடத்தையில் பேச்சு எவ்வளவு முக்கியம் என்று சொல்லிவிட்டு பின், பொதுவில் “நாம் இந்தக் கெட்ட வார்த்தைகள் பற்றி கொஞ்சம் பேசலாமா?” என்றதும், பெண் குழந்தைகள் நெளிந்துச் சிரித்தார்கள், பையன்கள் சிரித்தார்கள்.
“உங்களுக்குத் தெரியுமா, உண்மையில் கெட்ட வார்த்தைகள் என்று எதுவும் கிடையாது. நாம்தான் எழுத்துக்களை நம் மன நிலைக்கு ஏற்றவாரு தப்புத் தப்பாய் அடுக்கி மொழியைக் கொச்சையாக்குகிறோம். கெட்ட வார்த்தைகளில் இருக்கும் எழுத்துக்கள் கெட்ட எழுத்துக்களா என்ன? இல்லை, இல்லையா? அப்படியானால் கெட்ட வார்த்தைகள் என்றும் கூட எதுவும் இல்லைதானே? என்றால் பிறகு நாம் அப்படி பேசிவிடுவது என்ன? அது மனதின் வன்மம்.
இந்த, மனதின் வன்மம் உருவாக்குகிற எண்ணங்கள்தான் நம் மொழியை அநாகரிகமாக்குகிறது. வெள்ளந்தியான எழுத்துக்களை பாவம், கிறுக்குப் பிடிதாற்போல் கோர்த்து கெட்ட வார்த்தைகளுள் அடைத்துவிடுகிறோம்”. என்றேன், பிள்ளைகள் வியப்பாய் பார்த்தார்கள்.
“இவை எல்லாவற்றையும் விட இந்த வார்த்தைகள், இன்னொன்றையும் செய்துவிடுகிறது” என்றேன். என்ன என்பது போல பார்த்தார்கள். “பின்னே, அப்படி பேசிவிடுகிற போது, உங்க கோபத்திற்கான நியாயம் கூட குற்ற உணர்வாக மாறிவிடுகிறதே” என்றபோது முகங்கள் ஆமாம் என்றானது போல் இருந்தது.
தொடர்ந்து, “ கெட்ட வார்த்தைகள், கோபத்திற்கான வடிகாலும் இல்லை, மொழியும் அவமானப்படுகிறது, குற்ற உணர்வு வேற, இது தேவையா” என்றபோது பாடவேளை முடிந்திருந்தது.
நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தபோது, ஓடிவந்தவன், “சார், நீங்க எனக்காகத்தானே பேசுனீங்க, சாரி சார் இனிமேல் சத்தியமா பேச மாட்டேன் சார்” என்றபோது அவனுக்கு கண்கள் கலங்கியிருந்தது. அருகில் அழைத்து “நம் வகுப்பில் நீ மட்டும் அப்படி இருக்க முடியாது டா, பேசியது உனக்கு மட்டும் இல்லை சரியா, இப்ப வருத்தப் படறியே இதுதான் உண்மையான நீ, ஓ.கே. ரிலாக்ஸ்” என்று அனுப்ப நினைத்தேன். ஆனால் அவன் நகரவில்லை.
அங்கேயே தயங்கி நின்றவன் “சார், கோபம் வரும்போது தவறி பேசிவிடுகிறேன் சார், அதை எப்படி மாத்தறது சார்” என்றான். “சரி, ஓ.கே. நான் சொன்னது போல இது உன்னோட பிரச்சனை மட்டும் கிடையாது, மற்ற ப்ரண்ட்ஸ்க்கும் சேர்த்து நாளைக்கு க்ளாஸில் மறுபடியும் பேசுவோம்”. என்றதும் விடைபெற்றவனின் முகத்தில் எங்கிருந்தோ தப்பித்து வந்தவனின் தொனி இருந்தது.
எனது பிராயத்தில் தமிழுக்கு நான் செய்த காயங்களுக்கு பிராயச்சித்தம் செய்வது போல இருந்தது.

No comments:

Post a Comment