Wednesday 12 September 2018

பிடித்தக் கரும்பச்சை நிறமும், பறதேசமும்.



-யியற்கை

அந்த அறைக்குள் சென்று நாளாகிவிட்டிருந்தது தனபாக்கியத்திற்கு
அதற்குமுன் அவள் வீட்டில் புழங்காத இடமே இல்லை
மகன் 'அவரது' குடும்பத்தாருடன் பறதேசம் சென்றிருக்கிறார்
சாவி கொடுக்கும்போது ஒரு மாதம் ஆகுமென்று
தகவல் அளிக்கப்பட்டிருந்தது.
பெருக்கிக் கூட்டி வந்தவளுக்கு
தாழிடாமல் ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்த
அறைக் கதவின் அருகில் செல்லும்போதே
ஒருவித அந்நியம் பீடித்துக்கொள்கிறது,
அங்கு மட்டும் கூட்டாமல் விடுவதும்
நியாயமில்லை தனத்திற்கு.
அவள் கதவைத் தொடும்போது
ஆளில்லை என்பதே சொரனைக்கு வரவில்லை
அத்தனை நாசுக்காக பிறகேன் அதைத் தள்ளவேண்டும்.
அறைக்குள் ஏதோ நறுமணம்
மகனின் வாசனை தெரிந்தால் கொஞ்சமேனும் அறையோடு உரிமையாகலாம்.
என்னமோ பரபரப்புடன் கூட்டுகிறாள்
கட்டிலுக்கடியில் துடைப்பம் விசிறும்போது
புரண்டு வந்து விழுகிறது பேரன் விளையாடிச் சளைத்த காரொன்று.
அவளுக்கு மிகவும் பிடித்த கரும் பச்சை நிறமது.
மடியில் எடுத்துக் கொண்டு
அறையிலிருந்து வெளியேறியவள் ஹாலுக்கு வந்து பெருமூச்சு விடுகையில்
சொந்த தேசம் வந்தவளைப் போலிருந்தாள்.
மாலை வாசலில் விளக்குப் போட்டு
போர்டிக்கோவில் கால்கள் நீட்டி அமர்ந்தவள்
மடி அவிழ்த்து
இடது பக்கமாய் தலை சாய்த்து
வலது கையில் கார் பிடித்து முன்னும் பின்னும் உருடிப்பார்க்கிறாள்.
பிடித்தக் கரும்பச்சை நிறமென்றாலும்
பறதேசம் கூட்டிச் செல்லுமா என்ன.

No comments:

Post a Comment